திங்கள், 13 பிப்ரவரி, 2012

அப்பனின் கைகளால் அடிப்பவன்


அப்பனின் கைகளால் அடிப்பவன்

by Thiru Priyadhasi on Saturday, 11 February 2012 at 00:23 ·
நேற்று இரவுதான் சந்தித்தேன் அந்த மனிதரை .அதுவும் தற்செயலாக. இரவு பத்தரை மணிக்கு, நண்பன் நறுமுகை ஜெ.ரா.வுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தேன். எங்கள் பல்கலைக் கழகத்தின் விடுதிக்கு எதிரில் மெரீனா கடற்கரையில் இப்படி அமர்ந்து நாங்கள் உரையாடி ரொம்ப நாளாகிவிட்டதால் வெகு சுவாரஸ்யமாக இருந்தது. அதைக் கெடுக்கும் விதமாக வந்தவர்தான் நான் மேலே குறிப்பிட்ட மனிதர். பெயர் அதியன். கவிஞராம். கண்டிப்பாக புனைப்பெயராகத்தான் இருக்கும்.அவரது கவிதை வெளியீட்டிற்கு நண்பன் ஜெ.ரா.வை அழைக்க வந்தாராம். எனக்கு இந்த கவிஞர் என்கின்ற லேபிலோடு வருபவர்களைக் கண்டாலே நடுக்கம் வந்துவிடும். ஆறேழு ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் திருவண்ணாமலை, திண்டிவனம்,வந்தவாசி பகுதிகளிலிருந்து தினம் தினம் கோயம்பேட்டில் கால் பதிக்கும் இளங்கவிகளைக் காணும்போதெல்லாம் மனம் திகிலெடுக்கும். என்னவளே..அன்பே..என்று ஆரம்பித்து ஏகத்திற்கும் வர்ணித்திருப்பார்கள் பெண்களை. அதுவும் நோட்புக்கில் ஒரு பக்கம் மட்டுமே எழுதி, பூவெல்லாம் வரைந்து, கிட்டத்தட்ட அச்சடிக்காத கவிதைப் புத்தகம்  போலவே வைத்திருப்பார்கள். கண்டிப்பாக பாவலர் அறிவுமதியின் அணிந்துரை வாங்கும் திட்டமிருக்கும். அந்த பயம் இன்றுவரையிலும் தொடர்ந்துகொண்டுதானிருக்கிறது. எனவே முடிந்த வரை அவரிடம் பேச்சு கொடுத்துவிடாமல் எவ்வளவோ தவிர்க்கப் பார்த்தேன். ஆனால், சடங்கிற்காக எனக்கும் ஒரு அழைப்பிதழைக் கொடுத்தார். நானும் சடங்காகவே  அழைப்பிதழைப் பிரித்துப் பார்த்தேன். சட்டென்று அந்த தலைப்பு என் அசுவாரஸ்ய மன நிலையைக் கலைத்தது.  
                                                                "அப்பனின் கைகளால் அடிப்பவன்".
திடீர் ஆர்வமாகி அவரிடமிருந்த புத்தகத்தை வாங்கிப் பார்த்தேன். நினைத்ததைப் போலவே அணிந்துரை அறிவுமதி.சலிப்பாகி, ஏதோவொரு  பக்கத்தைப் பிரித்தேன்.
                                                        " வான் வழி
                                                           தரை வழி
                                                           நீர் வழி
                                                           சண்டையிடும் உலகில்

                                                           வழியில்லாமல் தவிக்கிறோம்
                                                           சுடுகாட்டிற்கு "
உடனே புரிந்துவிட்டது. இந்த மனிதன், என்னவளே..அன்பே..கவிஞர்கள்  வகையறா இல்லையென்று.                        (அ.அ. இருந்தும்) .  
இன்னும் சிலவற்றைப் படித்தேன். சமூக அரசியல் பேசும் கவிதைகள். இந்த அரசியல், சினிமாப்பாட்டு வாய்ப்பு கிடைப்பதற்கு முன்பு,நமது கிராமக் கவிகள் முழக்கமிடும் வழக்கமான அரசியல் இல்லை.
இது வேறு. சமநீதிப் போராட்டத்திற்கானது.ஆகவே..அதியன் ஐந்து நிமிடத்திலேயே எனக்கு மிக நெருக்கமான ஒருவராகத் தெரிந்தார். அழைப்பிதழை நன்றாகப் படித்தேன்.
பிப்ரவரி.19 ஞாயிறு அன்று மாலை.5 மணிக்கு நூல் வெளியீடு. இக்சா மையம்,எழும்பூர்.
அன்பாதவன்,யாழன் ஆதி, உமாதேவி ஆகியோர் நூல் குறித்து கருத்துரைப்பதாகப் போட்டிருந்தது. நானும் பேசலாமா என்று வாய்விட்டுக் கேட்க நினைத்தேன்.கேட்கவில்லை. நாளைக்கு கேட்டு அனுமதி வாங்கி எப்படியாவது கருத்துரைக்க முயல்கிறேன்.
இவர்  போன்ற படைப்பாளிகளைக்  குறித்துப் பேசுவதைத் தவற விடக்கூடாது.

- முனைவர் சா.திருவாசகம்
 ·  ·  · Share

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக