வியாழன், 16 பிப்ரவரி, 2012

கொல்லிப்பாவை இதழ் தொகுப்பு ஒரு மதிப்பீடு

தமிழ் இலக்கியம் செய்யுள் மரபிலிருந்து உரைநடைக்கு மாற்றமடைந்தபோது சிறுகதை, நாவல், புதுக்கவிதை என பல வகைமைகள் உருப்பெற்றன. தமிழ் இதழியல் வரலாற்றில் வெகுசன இதழ்களின் வணிக நோக்கிலான வௌதப்பாடுகள் ஆளும் வர்க்கத்தின் கருத்தியல் நிலைபாடுகளையும் பழம் மரபுகளையுமே உயர்த்திபிடித்தன. சமூக அரசியல் தளத்தில் மாற்றுத் சிந்தனைகளை உருவாக்கியதாகவும். நவீன தமிழிலக்கிய வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்ததாகவும் சிறு பத்திரிகைகளையே அடையாளப்படுத்தமுடியும். 1933ல் தொடங்கப்பட்ட மணிக் கொடி தமிழின் காத்திரமான சிறுகதை எழுத்தாளர்களை உருவாக்கியது. 1959ல் சி.சு.செல்லப்பாவால் தொடங்கப்பட்ட எழுத்து இதழ் தமிழின் புதுக்கவிதை வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்தது. பாரதிக்குப்பின் புதுக்கவிதைகளில் பல சாதனைகளை நிகழ்த்த எழுத்து களம் அமைத்து கொடுத்தது.

    இலக்கியத்தில் புதிய வடிவம், உத்திகள் ஆகியவற்றில் பரிசோதனைகளைச் செய்ய சிறு பத்திரிகைகளே அடித்தளமிட்டன. அதேநேரத்தில் படைப்புகளின் உள்ளடக்கம் சார்ந்து புதிய சிந்தனைகளை தொடக்க கால சிறுபத்திரிகைகளில் அரிதாகவே காணமுடிகிறது. மக்களை பாதிக்கும் சமூக அரசியல் பிரச்சனைகள் குறித்து அழுத்தமான எழுச்சிகள் எதையும் மணிக்கொடி, எழுத்து போன்ற சிறு பத்திரிகைகள் ஏற்படுத்திவிடவில்லை. மார்க்சிய அரசியல் பார்வையின் அடியாக 1936ல் தொடங்கப்பட்ட முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தைச் சார்ந்தவர்கள் மக்களை பாதிக்கும் பிரச்சனைகள் சார்ந்த தமது எழுத்துச்செயல்பாட்டை அமைத்துக் கொண்டனர். தமிழ் சிறு பத்திரிகை வரலாற்றில் மேற்குறித்த இரு மரபுகள் ஒன்றையொன்று ஒட்டியும் விலகியும் பயணித்து வருவதை இன்றும் காணமுடியும்.

    புதிய பரிசோதனைகள், உருவ உத்தி முறைகள், கலைத்தூய்மை, கலை உன்னதம், தனி மனிதத்துவம் என்னும் அடிப்படையில் ஒரு மரபும், இவற்றைக் கணக்கில் கொள்ளாத மார்க்சிய கோட்பாட்டு அடிப்படையிலானதும், திராவிட பண்பாடு, பாரம்பரியம் எனும் அடிப்படையிலானதுமான பல போக்குகளை சிறுபத்திரிகை வரலாறு உள்ளடக்கியது. இப்பின்புலத்தில் கொல்லிப்பாவை இதழின் இலக்கிய செயல்பாடுகள் புரிந்து கொள்ளப்படவேண்டும். 1976 அக்டோ பரில் முதல் இதழும், 1988 ஜூனில் தனது 20வது இதழுடன் கொல்லிப்பாவை வௌதயீடு நின்றுபோனது. முதல் 12 இதழ்களும் ஆ.ராஜமார்த்தாண்டனின் ஆசிரியர் பொறுப்பிலும், கடைசி 8 இதழ்கள் ஆர்.கே.ராஜகோபாலனை ஆசிரியராகவும் கொண்டு வௌதவந்துள்ளது. நீண்ட இடைவௌதகளுடன் தன் வௌதயீட்டை இது நிகழ்த்தியுள்ளது.

சிறுபத்திரிகை சூழலும், கொல்லிப்பாவையும்
    இடதுசாரி அரசியல் கருத்தாக்கத்தின் அடிபபடையில் படைப்புகளை வௌதயிட்ட இதழ்கள் ஒருபுறமும், படைப்பிலக்கியங்களில் பரிசோதனை, உருவ உத்தி முறைகளின் முக்கியத்துவம், தூய கலை ரசனை போன்ற அடிப்படைகளுடன் வௌதவந்த சிறு பத்திரிகைள் மற்றொருபுறமும் தனித்தனியே இயங்கி வந்த சூழலில் கொல்லிப்பாவை இதழ் அதன் உள்ளடக்கத்திலும் கருத்தியல் நிலைப்பாட்டிலும் மேற்சொன்னதில் இரண்டாவது வகையனதாகவே தன்னை அடையாளப்படுத்திக் கொண்டது. சமூகத்தின் புறவயமான பிரச்சனைகள் சார்ந்து அமைந்த முற்போக்கு பிரிவின் எழுத்துச் செயல்பாடுகளை வெற்று அரசியல் கொள்கை பிதற்றல்கள் என்று கடுமையாக விமர்சித்த தூய கலைவாத போக்கில் கொல்லிப்பாவை தன்னை இணைத்துக் கொண்டது என்றால் மிகையாகாது. அதேவேளையில் கொல்லிப்பாவையில் எழுதிய எழுத்தாளர்களான சுந்தரராமசாமி, பிரமிள், வண்ணநிலவன், நகுலன், வெங்கட்சாமிநாதன், ராஜமார்த்தாண்டன் ஆகியோரும் தமிழகத்தின் இடதுசாரி ஆக்கங்கள் குறித்து பெரிதும் கண்டுகொள்ளவில்லை. இவர்களில் மிரமிள் விதிவிலக்கானவர். கொல்லிப்பாவையில் வௌதயான இவரின் கட்டுரையில் மதநீக்கம் செய்யப்பட்ட கலையின் தேவைகள் சாத்தியங்கள் குறித்து ஆழமாக விவாதிப்பவை. இது இந்து மதம் சார்ந்த கோயில் கலாச்சாரங்களில் உருப்பெற்ற தூய கலை மரபுகள் குறித்து சிலாகிக்கும் வெங்கட்சாமிநாதனின் கருத்தியலுக்கு எதிரானதாகும். கொல்லிப்பாவையின் இதழ் 6,7,8 ஆகியவற்றில் மேற்குறித்த பின்புலத்தில் வெங்கட்சாமிநாதனால் எழுதப்பட்ட 'இரண்டு தலைமுறைகளுக்கிடையில்' எனும் கட்டுரையை ஒட்டி எழுந்த விவாதங்கள் குறிப்பிடத்தக்கன. கோயில் மரபு சார்ந்து உருவான பரதம், சங்கீதம், சமூகத்தின் எல்லா மக்களையும் உள்ளடக்கியதாக அக்கட்டுரையில் வெ.சா. கூறுகிறார். இக்கருத்தை மறுக்கும் சுந்தரராசாமியின் கருத்தும், அதைத் தொடர்ந்த மிரமிளின் கட்டுரையும் கொல்லிப்பாவையின் பண்முகத்தன்மைக்கு உதாரணமாகும். முற்போக்கு இலக்கிய வட்டத்தை ஆதரிக்காதபோதும் மேற்குறித்த விவாதங்கள் இடம்பெற்றமையால் கொல்லிப்பாவையின் முக்கியத்துவம் கூடுதலாகின்றது.

கொல்லிப் பாவை இதழ் தொகுப்பும் தொகுப்பு முறைகளும்
    தமிழுக்கு தொகுப்பு மரபு புதியதன்று. தமிழின் தொல் இலக்கியங்கள் முதல் நவீன இலக்கியங்கள் வரை தொகுப்புப் பணியின் தேவை இன்றியமையாத ஒன்று. தமிழ் இலக்கிய, இதழியல் வரலாற்றில் குறிப்பிட்ட ஒரு காலப்பகுதியில் தன் வௌதயீடுகளின் மூலம் இலக்கிய செயல்பாடுகளில் ஈடுபட்ட ஒரு இதழை தொகுக்க வேண்டிய அவசியம் என்ன? இவற்றை தொகுப்பதற்கான பொது நெறிமுறைகள் ஏதேனும் உள்ளனவா? இத்தொகுப்புகளின் வாசக, எழுத்தாள, ஆய்வு ரீதியான பயன்கள் என்னென்ன? என்ற கேள்விகள் எழுகின்றன. முதலாவது புதிய தலைமுறை வாசகர்கள் மற்றும் எழுத்தாளர்கள் தமிழின் முந்தைய இதழியல் வரலாறு மற்றும் இலக்கிய போக்குகள் குறித்து அறிந்து கொள்ள அத்தொகுப்புகள் உதவுகின்றன. தமிழ் சிறுபத்திரிகை வரலாற்றை எழுதவும் கற்பிக்கவும் அத்தொகுப்புகள் முதன்மை ஆதாரங்களாக அமையும். இத்தகைய பயன்மதிப்புகளை கொண்ட தொகுப்புகளின் தொகுப்பு முறைகள் சிக்கலானவை. குறிப்பிட்ட காலத்தில் வௌதவந்த இதழில் பல்வேறு கருத்தியல் சார்புடையவர்களும் பங்காற்றி இருப்பர். அவர்களின் பல படைப்புகளில் எதை தொகுப்பில் சேர்ப்பது, விடுவது குறித்த பிரச்சனைகள் எழும். இதழ் தொகுப்புகள் பெரும்பாலும் பொருன்மை அடிப்படையில் தொகுக்கப்படுவது உண்டு. படைப்புகளின் வௌதயீட்டு விவரங்கள் இத்தொகுப்பபுகளில் பெரும்பாலும் இடம்பெறுவதில்லை. குறிப்பிட்ட இதழின் வௌதயீட்டு காலத்தில் இலக்கிய ஆக்கங்கள் சார்ந்து உருவான மாற்றங்கள் வளர்ச்சி நிலைகளை மதிப்பிட இவ்வௌதயீட்டு விவரங்கள் பெரிதும் துணை செய்யும். இன்று தொகுப்புகளாக கிடைக்கும் கலாமோகினி, சுபமங்களா, கனையாழி, தீபம், கசடதபற, சக்தி ஆகிய இதழ் தொகுப்புகளில் படைப்புகளின் வௌதயீட்டு விவரங்கள் ஏதுமின்றி தொகுக்கப்பட்டுள்ளன. இப்பின்புலத்தில் கொல்லிப்பாவையின் இதழ் தொகுப்பு மிகுந்த முக்கியம் பெறுகின்றன. படைப்புகளின் வௌதயீட்டு விவரங்கள் இத்தொகுப்பில் வௌதயிடப்பட்டுள்ளன. மேலும் தொகுப்பு குறித்த முன்னுரிமை பல விவரங்களை உள்ளடக்கியது. இதழ் தொடங்கப்பட்ட சூழல், படைப்புகள் சார்ந்து எழுந்த விமர்சனம், தொகுப்பில் இடம்பெறாத படைப்புகள் குறித்த தகவல்கள் தொகுப்பின் நம்பகத்தன்மையை கூட்டுகின்றது. ஆயினும் கொல்லிப்பாவையின் 20 இதழ்களையும் பார்வையிட்ட பின்பு தொகுப்பின் நம்பகத்தன்மை குறித்து இறுதி முடிவுக்கு வரலாம். ஏனெனில் பிரமிள் சுந்தரராமசாமியின் 'ஜே.ஜே.' சில குறிப்புகள் நாவல் குறித்து எழுதியுள்ள 'புதிய புட்டியில் பழைய புளுகு' எனும் கட்டுரையில் கொல்லிப்பாவை 12ம் இதழில் தான் எழுதிய 'கருக்களம்' எனும் கட்டுரை பற்றி குறிப்பிடுகிறார். (வெயிலும் நிழலும் : 2011) இக்கட்டுரை கொல்லிப்பாவை இதழ் தொகுப்பில் இடம்பெறாதது மட்டுமின்றி தொகுப்புகளிலும் ஏதும் சொல்லப்படவில்லை. இருப்பினும் கொல்லிப்பாவை இதழ் தொகுப்பின் தனித்தன்மையய புரிந்துகொள்ள சந்தையில் கிடைக்கம் வேறு இதழ்களின் தொகுப்புகளுடன் ஒப்பிடத் தோன்றுகிறது. தமிழில் அமைப்பியல், தலித்தியம், பெண்ணியம், பின் நவீனத்துவம் ஆகிய கோட்பாடுகள் பெரிதும் விவாதிக்கப்பட அடித்தளத்தை அமைத்துத் தந்ததாக சொல்லும் "மேலும்' இதழ் தொகுப்பில் அடிப்படையான விவரங்கள்கூட காணப்படவில்லை. 'மேலும்' இதழ் தனது வௌதயீட்டை தொடங்கிய ஆண்டு இடைநின்ற, இறுதி வௌதயீடு போன்ற எவ்விதவிவரங்களுமின்றி அத்தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இதழின் ஆசிரியர், தொகுப்பாசிரியர் உரையிலும் மேற்படி எந்த குறிப்புகளும் இடம்பெறாதது குறிப்பிடத்தக்கது. இப்பின்புலத்தில் கொல்லிப்பாவையின் தொகுப்பு முறை தனித்தன்மையானது.

கொல்லிப்பாவையின் படைப்புகள் / படைப்பாளர்கள்
    கொல்லிப்பாவையில் பங்களித்த எழுத்தாளர்கள் முற்போக்கு மரபிற்கு எதிரானவர்கள். தனிமனித அனுபவம் தூய கலைவாதம், கலை உன்னதம் போன்ற சொல்லாடல்களை முன்மொழியும் எழுத்துச் செயல்பாடுகள் கொல்லிப்பாவையில் இடம்பெற்றன. கொல்லிப்பாவையின் கருத்தியலை ஒத்த சிற்றிதழ்களை குறித்து எழுதும்போது வி.அரசு இப்படிச் சொல்வார், "இன்றைய சமூக அமைப்பின் நெருக்கடிகளை கண்டு அவற்றுக்கு தீர்வு காணும் முயற்சியாக 'தேடல்' மேற்கொள்ளும் கண்ணோட்டத்தோடு வௌதவந்த பத்திரிகைகள் பலவாகும். இவை பெரும்பகுதி தனி மனித மனிதத்துவத்தை முதன்மைப்படுத்தின. இயக்கவியல் பொருள் முதல்வாத கருத்துக்களை இவை முழுவதையும் ஏற்றுக் கொள்வதில்லை. (அக்டோ பர் 2011 : ஆக்டோ பசும் கறிக்கோழிகளும்) இக்கருத்து கொல்லிப்பாவையின் செயல்பாடுகளுக்கு முழுவதும் பொருந்துவதில்லை.
  
  1976ல் வௌதவந்த முதல் இதழ் தொடங்கி தமிழின் அக்காலத்திய படைப்பாளர்கள் பலர் கொல்லிப்பாவையில் பங்காற்றினர். பிரமிள், சுந்தரராமசாமி, நகுலன், வண்ணநிலவன், ந.முத்துச்சாமி, எஸ்.ராமானுஜம், கி.ரா, தேவதச்சன், கலாப்ரியா, சுகுமாறன், ஜெயமோகன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர். கட்டுரை, கதை, கவிதைகள் எனும் வகைமைகளில் இவர்கள் பங்களிப்பு செய்துள்ளனர். ஜெயமோகனின் முதல் கவிதையான கைதி (கொ.ப.18)யும் இதில் அடங்கும். மட்டுமன்றி ஜார்ஜ் லூயி போர்ஹேஸ்,  பீட்டர் ஹாக்ஸ், ஹெர்னன்டோ  டெல்லஸ் ஆகியோரின் சிறுகதைகளும் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு வௌதயிடப்பட்டன. பிரம்மராஜன், சுந்தரராமசாமி போன்றவர்கள் கவிதைகள் எழுதியதுடன் அவர்கள் மொழி பெயர்த்த பல கவிதைகளும் இடம் பெற்றன. கொல்லிப்பாவையில் இடம்பெற்ற கட்டுரைகள் முக்கியமான விவாதங்களை எழுப்பியவை. கிருஷ்ணன் நம்பியின் கதைகள் குறித்து ஜெ.ஜேசுதானின் விமர்சனம் (கொ.ப.2) படைப்பின் வடிவம் வௌதப்பாட்டு முறைகள் குறித்து விரிவாக பதிவு செய்கிறது. தமிழ்ச்சிறுகதை வரலாறு - ஒரு முன்னுரிமை எனும் எம்.வி.எஸ்.குமாரின் கட்டுரை (கொ.ப.4) சமகால சிறுகதைகளின் போக்குகள் குறித்த விமர்சனமாக அமைந்துள்ளது. அர்த்தமுள்ள நாடக அரங்கம் எனும் கட்டுரை (கொ.ப.4) எஸ்.ராமாஜனுத்தால் எழுதப்பட்டுள்ளது. அரங்கம் என்னும் சொல்லின் பல்வேறு பரினாமங்களை விளக்குவதோடு திராவிட அரசியல் பிரச்சார நாடகங்கள் குறித்த விமர்சனத்தையும் முன்வைக்கின்றது. அதே இதழில் ந.முத்துசாமியால் எழுதப்பட்ட 'தெருக்கூத்து' எனும் கட்டுரை தமிழின் அரங்க கலையாக கூத்து இருப்பதையும் அதிலிருந்து நவீன நாடகம் கற்கவேண்டியவற்றையும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சமஸ்கிருத நாடக சாஸ்திரத்திலிருந்து பிறந்த கலை வடிவங்களாக கதகளி, யட்சகானம், தெருக்கூத்து, குச்சிபுடி முதலியவற்றைக் கருதுகிறார். தெருக்கூத்தின் பெண் பத்திரங்கள் தனக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துவதாகவும் குறிப்பிடுகிறார். சில அழகற்ற தன்மைகள் கூத்திலிருந்து கலையப்படவேண்டும் எனவும் சொல்கிறார். போர்டு பவுன்டேஷனின் நிதியில் தெருக்கூத்தை நகர்சார்ந்த நடுத்தர வர்க்கத்திற்கு நிகழ்த்திக் காட்டுபவராக இவரை பிரமிள் அடையாளப்படுத்துவார். டாய்லெட் சோப் வாசத்துடன் வந்து தெருக்கூத்தைப் பார்க்கும் மேல்தட்டு பார்வையாளர்களுக்கு தெருக்கூத்தின் இயல்பான தன்மை பிடிக்காததால் மேற்சொன்ன மாற்றங்களை நா.முத்துச்சாமி மேற்கொண்டார் எனவும் மிரம்மிள் கூறுவதை இங்கு பொறுத்திப் பார்க்கவேண்டும். கொல்லிப்பாவையின் 6,7,8ஆம் இதழ்களில் வௌதயான கட்டுரைகள் தமிழ் சமூகத்தின் கலை மரபுகள் குறித்த விவாதங்களை முன் வைத்ததில் முக்கிய பங்கு வகிக்கின்றன. வெங்கட்சாமிநாதன் எழுதிய "இரண்டு தலைமுறைகளுக்கிடையில் கட்டுரை, கோயில் கலாச்சாரம் சமூகத்தின் எல்லா தரப்பு மக்களின் பங்கேற்புடன் கூடியது என்கிறார். கோயில் சார்ந்து உருப்பெற்ற பரதம், இசை போன்ற கலை வடிவங்கள் பாமரரின் ரசனையை மேம்படுத்தியது; இன்றைய சினிமா கலாச்சாரம் வெகுமக்களின் ரசனையை கீழிறக்கம் செய்து அழித்துவிட்டதாக அக்கட்டுரையில் குற்றம் சாட்டியிருந்தார். இக்கட்டுரையின் கருத்தியலில் மாறுபாடு கொண்டதாக சுந்தரராமசாமியின் கடித வடிவிலான கட்டுரையும் அதன்பொறுட்டு வெங்கட்சாமிநாதனின் விளக்கமும் கொல்லிப்பாவை 7ல் இடம்பெற்றுள்ளன. இதனைத் தொடர்ந்த இதழில் 'வெகுசன ரசனையும் மதமரபும்' என்ற மிரமிளின் கட்டுரை மேற்குறித்த இருவரின் கருத்துக்களிலிருந்தும் மாறுபட்டது. அதில் இந்திய கலை மரபுகளை முற்றாக மதநீக்கம் செய்ய வேண்டிய தேவைகள் குறித்து பேசுகிறார். சாதி, மதம் கடந்த கலைகளாக கோயில் கலைகள் இருந்ததில்லை என்றும் குறிப்பிடுகிறார். கலை குறித்து இந்து மதம் சார்ந்த பிராமணப் பார்வைக்கும் திராவிட அரசியலால் உருவான கலை பண்பாட்டுப் பார்வைக்கும் கட்சிக்கருத்தை கலையாக பாவிக்கும் முற்போக்கு வட்டத்தின் பார்வைக்கும் பெரிய வேறுபாடுகள் இல்லை என்று மிரம்மிள் குறிப்பிடுவதை இக்கட்டுரையில் காணமுடிகிறது.
    கொல்லிப்பாவையில் வௌதயான மொழி பெயர்ப்புச் சிறுகதைகளில் பெர்ணாட்டோ  டெல்லசின் கதை ஒன்று எம்.யுவனால் பெறும் நுரைதான் என மொழி பெயர்க்கப்பட்டுள்ளது (கொ.ப.19). ராணுவ அதிகாரி ஒருவருக்கும் சவர தொழிலாளிக்கும் இடையிலான சந்திப்பின் அடிப்படையில் எழுதப்பட்ட சிறுகதை. அக்கதையின் சவரத் தொழிலாளி ராணுவ அதிகாரியாலும் கதையாசிரியராலும் குறிப்பிடப்படும் இடங்களில் அம்பட்டன் என்றே குறிப்பிடப்படுகிறார். மேற்கு நாட்டைச் சேர்ந்த ஒருவரின் கதையை தமிழில் மொழி பெயர்க்கும்போது நம் மொழி பெயர்ப்பாளர்களின் தமிழ்த்தன்மை / இந்திய தன்மை வௌதப்படுவதை இதில் காணலாம். மேற்கத்திய கலாச்சாரத்தில் சாதிய முறைகள் இல்லாதபோதும் சவரத் தொழில் செய்யும் கதாப்பாத்திரத்தை இந்திய / தமிழ்ச்சூழல் சாதி அடையாளத்துடன் குறிப்பிடுகிறது. இப்போக்கு வெகுசன தளத்தில் மட்டுமின்றி மாற்று அரசியல் கலை இலக்கிய செயல்பாடுகளின் தளமான சிறு பத்திரிகை சூழலிலும் காணக்கிடைக்கின்றது. தமிழ் சிறுபத்திரிகைள் குறித்து அ.மார்க்ஸ் இப்படிச் சொல்வார், "தமிழில் நவீன இலக்கியங்கள், புதிய சிந்தனைகள் ஆகியவற்றின் வளர்ச்சியில் சிற்றிதழ்களின் பங்கு முக்கியமானதுதான் எனினும் வெகுசனங்களிடமிருந்து விலகிய மேட்டிமைதன்மை, மக்களை பாதிக்கும் அரசியலிலிருந்து முற்றாக விலகி நிற்றல், மேற்சாதி பின்புலம், திராவிட / மார்க்சிய கருத்தியல்கள் மீதான வெறுப்பு ஆகியவை தமிழ் சிறு பத்திரிகைகளின் பண்புகளாக இருந்துள்ளன. வெங்கட்சாமிநாதனின் கோயில் கலாச்சாரம் குறித்த கட்டுரையும் தேவையற்ற அம்சங்கள் - அழகற்ற தன்மைகள் தெருக்கூத்திலிருந்து நீக்கப்படவேண்டும் என்ற ந.முத்துச்சாமியின் கட்டுரையும் இங்கு நினைவுபடுத்திக் கொள்ளப்படவேண்டியவை. வெகுமக்கள் கலையை தூய்மையற்றதாகவும் ஒழுங்கற்றதாகவும் கருதும் மேட்டிமை சிந்தனை இக்கட்டுரைகளில் வௌதப்படுகின்றது. இக்கருத்துக்களை கடுமையாக விமர்சிக்கும் மிரமிளின் கட்டுரையும் கொல்லிப்பாவையில் வௌதயாகியிருப்பது இங்கு கவனிக்கத்தக்கது. சாதிகளற்ற சமூகத்தில் எழுதப்படும் ஒரு கதை தமிழுக்கு வரும்போது கதையின் கதாப்பாத்திரம் அது செய்கின்ற தொழிற்சார்ந்து சாதிப்பெயரால் குறிப்பிடப்படுகின்றது. அதுவும் அக்குறிப்பிட்ட சாதியை ஆதிக்க சாதியினர் குறிக்கும் இழி வழக்கால் குறிக்கப்படுவதை எவ்வாறு புரிந்து கொள்வது? சாதி, மத நீக்கம் செய்யப்படாத, சாதிய மனோபாவத்துடன் செயல்பட்ட படைப்பாளர்களின் உளவியலையே இது சுட்டிக்காட்டுகின்றது.
   
 கொல்லிப்பாவையில் மறுபிரசுரங்களாக சில எழுத்துக்களும் வௌதயிடப்பட்டன. 'ஆற்றங்கரை பிள்ளையார்' என்ற புதுமைப்பித்தனின் தொகுக்கப்படாத சிறுகதை இப்படி வௌதயானதுதான். எம்.வேதசகாயகுமார் தன் முனைவர் பட்ட ஆய்வு தேடலின் ஊடாக கண்டறிந்த இக்கதை கொல்லிப்பாவையில் வௌதயான பிறகே ஐந்திணை பதிப்பக வௌதயீடாக வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கல்வி வட்டத்தைச் சார்ந்தவர்கள் சிற்றிதழ் செயல்பாடுகளில் பங்கு கொள்வதில்லை என்னும் கருத்தை கொல்லிப்பாவை மறுபரிசீலனை செய்ய வைக்கிறது. புதுமைப்பித்தனின் கதை கண்டெடுக்கப்பட்டு மறுபிரசுரமானதை 'கொல்லிப்பாவையில் காணலாகும் கல்வி வட்ட பண்பு' என குறிப்பிடுவார் வேதசயாககுமார்.

இறுதியாக...
    கலை  உன்னதம், தனி மனிதத்துவம் போன்றவற்றை வலியுறுத்தும் சிற்றிதழ்களும் பொருள் முதல்வாத சிந்தனையை அடிப்படையாக கொண்ட சிற்றிதழ்களும் ஒன்றையொன்று மறுத்தே இயங்கி வந்துள்ளன; வருகின்றன. கொல்லிப்பாவை இந்த மரபிலிருந்து விலகி நடந்தாலும் எழுத்து இதழின் புதுக்கவிதை மரபை முன்னெடுக்கும் பொருட்டு புதுக்கவிதையின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியுள்ளது. இடதுசாரி பின்புலத்துடன் வௌதவந்த சிற்றிதழ்கள் அவற்றின் பரிணாமத்தில் அமைப்பியல், பெண்ணியம், தலித்தியம், பின்நவீனத்துவம் ஆகிய சிந்தனை போக்குகளுக்கு இடமளித்துள்ளது என்பார் ராஜ்கவுதமன். (ராஜ்கவுதமன்: 1992). முற்போக்கு இலக்கிய மரபை பெரிதும் கண்டுகொள்ளாத கொல்லிப்பாவையின் இலக்கிய செயல்பாடுகளில் மிரமிளின் பங்களிப்பு தனித்துவமானது. கலை உன்னதம் என்பது சாதிய மரபுக்கும் மத மரபுக்கும் அப்பாற்பட்டதாக இருக்கவேண்டுமென்ற மிரமிளின் பார்வைக்கும் வெங்கட்சாமிநாதனின் கலை உன்னத பார்வைக்கும் பெரிதும் வித்தியாசமுள்ளது. வேறுபட்ட பார்வைகள் கொண்டவர்களை கொல்லிப்பாவை ஒருங்கிணைத்துள்ளது. 70ன் இறுதி தொடங்கி 80ன் இறுதி வரையிலான தமிழ்ச்சிற்றிதழ் எழுத்தாளர்களின் படைப்புகள் சார்ந்த விவாதப் புள்ளிகளை கொல்லிப்பாவை ஒருங்கிணைத்துள்ளதை அறியலாம். தமிழ் சிற்றிதழ் வரலாற்றில் இக்காலக்கட்டத்தில் நிகழ்ந்த படைப்புச் செயல்பாடுகள் அவற்றை ஒட்டிய விவாதங்கள், கொல்லிப்பாவை படைப்பாளர்களின் கருத்தியல்கள், இலக்கிய சாதனைகளை அறிந்துகொள்ள இத்தொகுப்பு உதவும். தொகுப்பு முறையியல்களோடு கொல்லிப்பாவையின் ஆசிரியர்களால் உருவாக்கப்பட்டுள்ள இத்தொகுப்பு மருதா பதிப்பகம் 2004ல் வௌதயிட்டுள்ளது.

1.    ஆக்டோ பசும், கறிக்கோழிகளும் - அக்டோ பர் 2011, இளவழகன் பதிப்பகம்

2. இலக்கியத்தில் இந்துத்துவம் ; காலச் சுவடின் ஆள்காட்டி அரசியல், நிறப்பிரிகை வௌதயீடு

3.    'மேலும்' இதழ் தொகுப்பு - டிசம்பர் 2007 காவ்யா பதிப்பகம்

4.    வெயிலும் நிழழும் - டிசம்பர் 2011, வம்சி

5.    வரலாற்று சலனங்கள் - டிசம்பர் 2011, வம்சி

6.    'முன்னவன்' மணிக்கொடி பொன்விழா மலர் 1983

7.  எண்பதுகளில் தமிழ்க் கலாச்சாரம், ராஜ்கவுதமன், நவம்பர் 1992, காவ்யா பதிப்பகம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக