திங்கள், 13 பிப்ரவரி, 2012


ரஜினி -எஸ்.ரா-மற்றும் வயிற்றெரிச்சல்கள்


by Thiru Priyadhasi on Tuesday, 7 February 2012 at 23:58 ·


இலக்கிய விழாவில் ரஜினியா?கடந்த வாரத்திலிருந்து 'இலக்கிய அனுதாபி'களின் பேச்சு இதைப் பற்றியதாக இருப்பதைக் காண்கிறோம்.என்னிடம் கூட(!) ஒரு நண்பர் இது குறித்து அதிகம் விசனப்பட்டார்."ஏன் ரஜினி தீண்டப்படாதவரா?" என்று கேட்டேன். "இருந்தாலும் ஒரு தூய்மையான இலக்கிய விழாவில் ரஜினி எப்படி கலந்துகொள்ளலாம் .. ஆ..ஊ.."என்றார்.
இது குறித்து கொஞ்சம் எழுதலாம் என்று நினைக்கிறேன். எனக்கும் பொழுது போகவேண்டுமில்லையா?
இந்த எஸ்.ரா.இருக்கிறாரே, மனிதர் ஒரு 'மிதவாத' எழுத்தாளர். அதாவது எதைக்குறித்தும் யாரைக்குறித்தும் ஒருபோதும் யாதொரு எதிர்மறைக் கருத்தும் (அ) கருத்தும் கூறாதவர். ஆனால் அவரையும் மீறி உணர்ச்சிவசப்பட்ட தருணம் ஒன்றுண்டு. "காவல் கோட்டம் ஆயிரம்பக்க அபத்தம்" தான் அது. மேலும், ஈழப்படுகொலைகளின் போதும் தலித் படுகொலைகளின் போதும்,இரவுகளில் அழுது புலம்பி தூக்கமின்றி தவித்ததாகச் சொல்லிக்கொண்ட அவர் அவைகள் குறித்து ஒரு வரி கூட எழுதியதில்லை.(அப்படி இருந்தால் குறிப்பிடலாம்).
அவரது எழுத்துக்களில் ஒருபோதும் அரசியல் இருந்ததில்லை.
மாறாக எழுத்துக்களற்ற அரசியல் வேலைகளில் அவர் ஈடுபடுவதுண்டு. அதாவது, பலரையும் அரவணைப்பது போல் பாசாங்கு செய்வது தான் அந்த அரசியல்.  தன்னை விமர்சிப்பவர்களிடமிருந்து தப்பிக்க அவர் விரிக்கும்  வலை அது. அந்த வலையில் பெருவாரியான புத்தகக்காரர்கள் மாட்டிக்கொண்டனர் என்பதே உண்மை.
அதில் முக்கியமானவர் சாரு நிவேதிதா. இவர் இருக்கிறாரே..இவரைப் பற்றி எழுதுவதற்கு நிறைய உள்ளது. உண்மையில் மனுஷன் ஒரு வெள்ளந்தி தான். யார் சிரித்தாலும் நம்பி விடுவார். நித்தி,மிஷ்கின்,கோபிநாத்,திருவண்ணாமலை சடையப்பர், அக்கினிப்புத்திரன் என்று அந்த பட்டியல் நீண்டது. அதே போலத்தான் எஸ்.ரா.வின் பாசாங்கான நட்பில் மயங்கி தனது எழுத்துக்கான கச்சாப் பொருளை இழந்தார். ஆம், பழைய சாருவாக இருந்திருந்தால் இந்நேரம் எஸ்.ரா. டரியல் ஆகியிருப்பார். எல்லாம் அந்த அக்கினிப் புத்திரனால் வந்தது. அவர் தான் பதிப்பக ஆசைக்காட்டி சாருவை சாந்தமாக்கிவிட்டார் போலும். பாவம் சாருவும் தான் என்ன செய்வார். போகட்டும். இது குறித்து வேறொரு சமயத்தில் பேசலாம்.
ஆகவே, தன் எழுத்தில் கிஞ்சித்தும்  அரசியல் பேசாத  ஒருவர்,சந்தர்ப்பம் வாய்த்தால் பா.விஜய்யை பாப்லோ நெரூடா அளவிற்கு ஒப்பிடக்கூடிய ஒருவர், ரஜினியை அடம்பிடித்து அழைத்து வந்ததில் என்ன பிழையைக் கண்டீர்கள்? என்பதே என் கேள்வி யுவர் ஹானர்.
மாறாக ஒரு அ.மார்க்ஸ், ஆதவன் தீட்சண்யா போன்றோர் இது மாதிரியான காரியத்தை செய்திருந்தால்(மாட்டார்கள்) அதுதான்  விமர்சிக்கப்பட வேண்டியதே  தவிர எஸ்.ரா.இல்லை. அவர் இலக்கியம் என்கின்ற பெயரில் காரிய பலன்கள் பெற முடியும் என்பதில் நம்பிக்கை கொண்ட ஒருவர். இவ்விஷயத்தில் அவர் இன்னொரு வைரமுத்து. இனி இது போன்ற காரியங்களுக்காக யாரும் அவரைப் பொருட்படுத்த வேண்டியதில்லை.
அடுத்து இன்னொன்று.
தமிழ் நடிகர்களுக்கு இலக்கியத்தில் அ..ஆ..கூட தெரிவதில்லை..பட்சே கேரளத்தில் பாருங்கள் மம்மூட்டி எல்லாம் எவ்வளவு அக்கறையுடன் இலக்கிய கூட்டங்களுக்கு வருகிறார் கர்நாடகாவில் பாருங்கள் க்ரிஷ் கர்னட் லாம் எப்படி இலக்கியம் வளர்க்கிறார்  என்றெல்லாம் பிற மாநிலப் புகழ் பிரஸ்தாபிப்பவர்கள் எல்லாம் ரஜினி விஷயத்தில் ஏன் வயிரேரிகின்றனர்  என்று தெரியவில்லை.
ஆனால் ஒன்று நண்பர்களே..இந்த விருது விழா மூலம் அக்கினிப்புத்திரன் தனது வீழ்ச்சியை  தானே தொடக்கி வைத்திருக்கிறார் என்றே சொல்லவேண்டும்.   

- முனைவர் சா.திருவாசகம்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக